மெக்சிக்கோ
வட அமெரிக்க நாடு / From Wikipedia, the free encyclopedia
மெக்சிகோ (எசுப்பானியம்: México, "மெஃகிக்கோ") வட அமெரிக்கக் கண்டத்திலுள்ள ஒரு கூட்டாட்சி அரசமைப்புக் குடியரசு நாடாகும். முறைப்படி இது ஐக்கிய மெக்சிக்க நாடுகள் என அழைக்கப்படுகிறது.[1] ஐக்கிய அமெரிக்க நாடுகள் இதன் வடக்கு எல்லையாக அமைந்துள்ளது. தெற்கிலும், மேற்கிலும் பசிபிக் பெருங்கடல் உள்ளது. தென்கிழக்கு எல்லையில் குவாத்தமாலா, பெலிசே ஆகிய நாடுகளும் கரிபியக் கடலும் உள்ளன. கிழக்கு எல்லையில் மெக்சிகோ குடா அமைந்துள்ளது.[2] ஏறத்தாழ இரண்டு மில்லியன் சதுர கிலோமீட்டர் (760,000 சதுர மைல்களுக்கு மேல்)[3] பரப்பளவு கொண்ட மெக்சிகோ, பரப்பளவு அடிப்படையில் அமெரிக்கக் கண்டத்திலுள்ள ஐந்தாவது பெரிய நாடும், உலகில் 13-ஆவது பெரிய விடுதலை பெற்ற நாடும் ஆகும். 113 மில்லியன் மக்கள் தொகையுடன்[4] உலகின் 11-ஆவது பெரிய மக்கள் தொகை கொண்ட நாடாகவும் இது விளங்குவதுடன், உலகில் அதிக மக்கள் எசுப்பானிய மொழி பேசும் நாடும் இதுவாகும். இதன் தலைநகரம் மெக்சிகோ நகரம். மெக்சிக்கோவின் கூட்டாட்சி அமைப்பில் 31 மாநிலங்கள் இணைந்துள்ளன. இவற்றோடு தலைநகரம் கூட்டாட்சி மாவட்டமாக இருக்கிறது.
ஐக்கிய மெக்சிக நாடுகள் Estados Unidos Mexicanos எசுட்டாடோசு உனீடோசு மெஃகிக்கானோசு | |
---|---|
நாட்டுப்பண்: இம்ணோ நாசியொனால் மெஃகிக்கானோ | |
தலைநகரம் மற்றும் பெரிய நகரம் | மெக்சிகோ நகரம் |
ஆட்சி மொழி(கள்) | மத்திய அரசு மட்டத்தில் இல்லை |
அரசாங்கம் | கூட்டாட்சி குடியரசு |
• அதிபர் | பெலீப்பே கால்டெரோன் (PAN |
சுதந்திரம் | |
• அறிவிப்பு | செப்டம்பர் 16, 1810 |
• ஏற்பு | செப்டம்பர் 27, 1821 |
பரப்பு | |
• மொத்தம் | 1,972,550 km2 (761,610 sq mi) (15-ஆவது) |
• நீர் (%) | 2.5% |
மக்கள் தொகை | |
• 2005 மதிப்பிடு | 107,029,000 (11-ஆவது) |
• 2000 கணக்கெடுப்பு | 101,879,171 |
மொ.உ.உ. (கொ.ஆ.ச.) | 2005 மதிப்பீடு |
• மொத்தம் | $1.073 இலட்ச கோடிகள் (டிரில்லியன்) (13-ஆவது) |
• தலைவிகிதம் | $10,186 (64-ஆவது) |
மமேசு (2003) | 0.814 அதியுயர் · 53-ஆவது |
நாணயம் | மெக்சிகோ பீசோ (MXN) |
நேர வலயம் | ஒ.அ.நே-8 to -6 |
மாறுபட்டது | |
அழைப்புக்குறி | 52 |
இணையக் குறி | .mx |
கொலம்பசுக்கு முற்பட்ட மெக்சிகோவில் பல பண்பாடுகள் முதிர்ச்சியுற்று, ஒல்மெக், தோல்ட்டெக், தியோத்திகுவாக்கான், சப்போட்டெக், மாயா, அசுட்டெக் போன்ற நாகரீகங்களாக உயர்நிலை அடைந்தன. 1521-ஆம் ஆண்டில், மெக்சிகோவின் பகுதிகளை எசுப்பெயின் கைப்பற்றித் தனது தளமான மெக்சிகோ-தெனோச்தித்லானில் இருந்து குடியேற்றங்களை நிறுவியது. இப்பகுதிகள் புதிய எசுப்பெயினின் வைசுராயகமாக நிர்வாகம் செய்யப்பட்டது. 1821-ஆம் ஆண்டில் இக் குடியேற்ற நாட்டின் விடுதலை ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்னர், இந்த ஆட்சிப்பகுதிகள் மெக்சிகோ ஆக மாறின. விடுதலைக்குப் பிற்பட்ட காலத்தில், பொருளாதார உறுதியின்மை, மெக்சிக்கோ-அமெரிக்கப் போர், அமெரிக்காவிடம் ஆட்சிப்பகுதிகள் இழப்பு, உள்நாட்டுப் போர், இரண்டு பேரரசுகள் உருவாக்கம், ஒரு உள்ளூர் சர்வாதிகாரம் போன்றவற்றுக்கு மெக்சிகோ முகம் கொடுக்கவேண்டி இருந்தது. சர்வாதிகாரம் 1910-ஆம் ஆண்டின் மெக்சிக்கப் புரட்சிக்கு வித்திட்டது. இதைத் தொடர்ந்து 1917-ஆம் ஆண்டின் அரசியல் சட்டம் உருவானதுடன், தற்போதைய அரசியல் முறைமையும் நடைமுறைக்கு வந்தது. சூலை 2000-ஆவது ஆண்டில் இடம்பெற்ற தேர்தலில் முதல் முறையாக எதிக் கட்சியான நிறுவனப் புரட்சிக் கட்சி சனாதிபதி பதவியைக் கைப்பற்றியது. மெக்சிகோ அதிபராக அக் கட்சியைச் சேர்ந்த என்ரிக் பீனா நீட்டோ பதவி ஏற்றுள்ளார்.[5]
மெக்சிகோ உலகின் மிகப் பெரிய பொருளாதாரங்களுள் ஒன்று என்பதுடன், இது ஒரு பிரதேச வல்லரசும், நடுத்தர வல்லரசும் ஆகும். அத்துடன், மெக்சிக்கோவே இலத்தீன் அமெரிக்க நாடுகளுள், பொருளாதார ஒத்துழைப்புக்கும் வளர்ச்சிக்குமான அமைப்பின் முதலாவது உறுப்பு நாடு ஆகும். இது, 1994-ஆம் ஆண்டிலிருந்து இவ்வமைப்பின் உறுப்பினராக இருந்து வருகிறது. மெக்சிக்கோ ஒரு மேல்-நடுத்தர வருமானமுள்ள நாடாக உலக வங்கியால் கணிக்கப்படுகிறது. இது புதுத் தொழில்மய நாடாக இருப்பதுடன், வளர்ந்துவரும் ஆற்றல் வாய்ந்த நாடாகவும் உள்ளது. மெக்சிக்கோ 13-ஆவது பெரிய பெயரளவு மொத்த உள்நாட்டு உற்பத்தியையும், 11-ஆவது பெரிய வாங்கும் திறன் சமநிலையையும் கொண்டுள்ளது. இந்நாட்டின் பொருளாதாரம் அதன் வட அமெரிக்கச் சுதந்திர வணிக ஒப்பந்தக் கூட்டாளிகளின் பொருளாதாரங்களுடன், சிறப்பாக ஐக்கிய அமெரிக்காவின் பொருளாதாரத்துடன், வலுவாகப் பிணைந்துள்ளது. நாட்டிலுள்ள மொத்த யுனெசுக்கோ உலக பாரம்பரியக் களங்களின் எண்ணிக்கையின் அடைப்படையில் மெக்சிக்கோ உலகில் ஆறாவது இடத்திலும், அமெரிக்கக் கண்டத்தில் முதலாவது இடத்திலும் உள்ளது. இங்கே மொத்தம் 31 உலக பாரம்பரியக் களங்கள் உள்ளன. 2007-ஆம் ஆண்டில் மெக்சிகோவுக்கு வந்த வெளிநாட்டுப் பயணிகளின் எண்ணிக்கை உலகில் 10-ஆவது பெரியது. அவ்வாண்டில் 21.4 மில்லியன் பயணிகள் வந்தனர்.
2006-ஆம் ஆண்டிலிருந்து, மெக்சிக்கோ, போதைப்பொருள் போரின் நடுவே இருந்து வருகிறது. இதனால், 60,000 பேர்வரை இறந்துள்ளனர்.