கிறிஸ்தவம்
நாசரேத்து இயேசுவின் வாழ்வு மற்றும் போதனைகளின் அடிப்படையில் அமைந்த ஆபிரகாமிய ஓரிறைவாத மதம் / From Wikipedia, the free encyclopedia
கிறிஸ்தவம் (Christianity) ஓரிறைக் கொள்கையுடைய[1] சமயமாகும். நாசரேத்தூர் இயேசுவின் வாழ்வையும் அவரது போதனைகளையும் மையப்படுத்தி விவிலிய புதிய ஏற்பாட்டின்படி செயற்படுகிறது.
கிறிஸ்தவர் இயேசுவை மெசியா மற்றும் கிறிஸ்து என்னும் அடைமொழிகளாலும் அழைப்பதுண்டு. இவ்விரு சொற்களின் பொருளும் “திருப்பொழிவு பெற்றவர்” (”அபிஷேகம் செய்யப்பட்டவர்”) என்பதாகும். மெசியா என்னும் சொல் எபிரேய மொழியிலிருந்தும் கிறிஸ்து என்னும் சொல் கிரேக்க மொழியிலிருந்தும் பிறந்தவை (கிரேக்கம்: Χριστός, Christos; מָשִׁיחַ, Māšîăḥ -Messiah என்ற எபிரேயச் சொல்லின் மொழிபெயர்ப்பு). சுமார் 2.4 பில்லியன் உறுப்பினர்களைக் கொண்டு (உலக மக்கள் தொகையில் 31.3%) உலகின் பெரிய சமயமாகக் காணப்படுகிறது.
கிறிஸ்தவம் பல உட்பிரிவுகளைக் கொண்டுள்ளது. இதில் கத்தோலிக்க திருச்சபை மிகப்பெரியதாகும். கிறிஸ்தவம் கி.பி. முதலாம் நூற்றாண்டில் யூத மதத்தின் உட்பிரிவாக இருந்ததாலும், யூதர்கள் எதிர்பார்த்த மீட்பர் கிறிஸ்து என கிறிஸ்தவர்கள் நம்புவதாலும் யூத புனித நூலை பழைய ஏற்பாடு என்னும் பெயரில் விவிலியத்தின் ஒரு பகுதியாக ஏற்கின்றனர். யூதம் மற்றும் இசுலாம் போலவே கிறிஸ்தவமும் தன்னை ஆபிரகாம் வழி வந்த சமய நம்பிக்கையாகக் கொள்வதால் அது ஆபிரகாமிய சமயங்களுள் ஒன்றாகக் கருதப்படுகின்றது.