கனிமச் சேர்மம்
கனிமங்களால் ஆன சேர்மம் / From Wikipedia, the free encyclopedia
கனிமச் சேர்மங்கள் (Inorganic compounds) என்பவை இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கார்பனல்லாத தனிமங்கள் ஒரு குறிப்பிட்ட விகிதாச்சாரத்தில் இணைந்து உருவாகும் சேர்மங்களாகும். இச்சேர்மங்களில் பெரும்பாலானவை அயனிப்பிணைப்புகளால் பிணைக்கப்பட்டவையாகும் [1]. வேறு விதமாகக் கூறுவதென்றால், கார்பன் - ஐதரசன் பிணைப்பைக் (C-H பிணைப்பு) கொண்டிராத ஒரு சேர்மமே கனிமச் சேர்மமாக கருதப்படுகிறது. மேலும், நிலத்திலிருந்து அல்லது பாறைகளிலிருந்து பெறப்பட்ட கனிமங்களின் சேர்மங்களாகவும் கருதப்படுகிறது [2]. கார்பன் ஐதரசனுடன் இணைந்து உருவாகும் கார்பனின் சேர்மங்கள் கரிமச் சேர்மங்கள் என வகைப்படுத்தப்படுகின்றன. கரிமச்சேர்மங்கள் சகப்பிணைப்புகளால் பிணைக்கப்பட்டவையாகும்.
சில கார்பைடுகள் (உதாரணம் சிலிகன் கார்பைடு SiC2), சில கார்பனேட்டுகள் (உதாரணம் கால்சியம் கார்பனேட்டு CaCO3), சில சயனைடுகள் (சோடியம் சயனைடு NaCN), கார்பனோராக்சைடு, கார்பனீராக்சைடு போன்றவை கனிமச் சேர்மங்களாக வகைப்படுத்தப்படுகின்றன.
பின்வரும் அடிப்படைகளில் ஒன்றை அல்லது அதற்கு மேற்பட்டவற்றை ஒரு வேதிச்சேர்மம் நிறைவேற்றினால் அதை ஒரு கனிமச் சேர்மம் என்று வகைப்படுத்தலாம் எனப்படுகிறது:
- பெரும்பாலான சேர்மங்கள் கார்பன் அணுவைக் கொண்டிருக்காது.
- வாழும் உயிர்னங்களில் இவற்றைக் கண்டறிய முடியாது அல்லது அவற்றுடன் இனைக்கப்பட்டிருக்காது.
கரிம மற்றும் கனிம சேர்மங்களுக்கிடையில் தெளிவான அல்லது உலகளாவிய அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட வேறுபாடு எதுவும் இல்லை. கார்பனைக் கொண்டிருக்கும் சேர்மங்கள் அனைத்தும் கரிமச் சேர்மங்கள் என்று கரிம வேதியியலர்கள் பொதுவாகவும் மரபார்ந்த முறையிலும் குறிப்பிடுகின்றனர். எனவே இயல்பாக கனிம வேதியியல் என்பது கார்பன் இல்லாத மூலக்கூறுகளுடன் தொடர்புடையது எனப் பொருள் கொள்ளப்பட்டது [3][4]. பல தாதுக்கள் உயிரியலில் தோற்றமளிப்பதால், உயிரியலாளர்கள் கரிம வேதியியலிலிருந்து கனிம வேதியியலை வேறொரு வகையில் வேறுபடுத்துகின்றனர்.